கோலாபூர் / நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டம், பர்ஷி தாலுகாவில் உள்ள போர்காவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துக்காராம் சாவன் (58). இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை எடுத்துக் கொண்டு 70 கி.மீ. தூரத்தில் உள்ள சோலாப் மண்டிக்கு (வேளாண் விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி) சென்றார். அங்கு ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டது. வேறு வழியின்றி ராஜேந்திர துக்காராம் வெங்காயத்தை வந்த விலைக்கு விற்று விட்டார்.
அதன்பின் பல்வேறு கழிவுகள் போக அவருக்கு கிடைத்தது ரூ.2.49 மட்டுமே. அதுவும் காசோலையாக வழங்குவதால் 49 காசுகளை கழித்துவிட்டு அவரிடம்ரூ.2-க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 15 நாட்கள் கழித்துதான் அந்த 2 ரூபாயை அவர் வங்கியில் இருந்து பெற முடியும்.
இதுகுறித்து ராஜேந்திர துக்காராம் கூறியதாவது: ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விலை பேசினார்கள். அதன்படி மொத்தம் 512 ரூபாய் வந்தது. அதில், வெங்காயத்தை ஏற்றி வந்த வாகன கட்டணம், வெங்காயத்தை வாகனத்தில் இருந்து கீழே இறக்கிய கட்டணம், எடை போட்டதற்கான கட்டணம், மண்டி கமிஷன் என எல்லாவற்றையும் சேர்த்து மண்டி வர்த்தகர் ரூ.509.50 கழித்து விட்டார். மீதி ரூ.2-க்கான செக் கொடுத்தார். கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்தை எப்படியோ ரூ.20-க்கு விற்றேன்.
விதைகளின் விலை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விலை எல்லாம் கடந்த 4 ஆண்டுகளாக இரண்டு மடங்காகி விட்டது. 500கிலோ வெங்காயத்தை விளைவிக்க நான் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தேன். ஆனால், இந்த முறை எனக்கு 2 ரூபாய் மட்டுமே கிடைத்தது. இவ்வாறு ராஜேந்திர துக்காராம் வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து வெங்காயத்தை வாங்கிய சோலாபூர் மண்டி வர்த்தகர் நசீர் கலீபா கூறும்போது, ‘‘சோலாப்பூர் மண்டியில் எல்லா வர்த்தக நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. கொள்முதல், விற்பனை என அனைத்தும் பதிவாகிறது. ரசீது, காசோலை விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவிடப்படும். அந்த வகையில் மிகக் குறைந்த தொகைக்கு கூட காசோலைதான் வழங்கப்படும். இதற்கு முன்னரும் இதுபோல் பலமுறை காசோலை வழங்கி இருக்கிறோம். தவிர ராஜேந்திர துக்காராம் கொண்டு வந்த வெங்காயம் தரம் குறைந்தது’’ என்றார்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘‘மகாராஷ்டிராவில் விளையும் வெங்காயத்தில் 25 சதவீதம் தான் உயர்ந்த தரமுள்ளவை. மற்றவை நடுத்தரம் மற்றும் தரம் குறைந்தவை’’ என்கின்றனர். விளைச்சல் அதிகமாக இருந்தும் தரமில்லாததால் குறைந்த விலைக்கே விற்பனையாவதாக கூறுகின்றனர்.