பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பனை மற்றும் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து தடுப்பணை மூலமாக சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் உயர்ந்து விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
இதில், ஆனைமலை, கோட்டூர், சமத்தூர், ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், கோமங்கலம், பொன்னாபுரம், வடக்கிபாளையம், ராமபட்டிணம், நெகமம் உள்பட பல கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட குளம் மற்றும் குட்டைகளும் உள்ளது. பருவ மழைகாலங்களில் தடுப்பணை, குளம், குட்டைகளில் தண்ணீர் வெகுவாக உயர்ந்திருக்கும். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக மழையின்றி, வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த சில வாரமாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது.
வெயிலின் தாக்கம் மற்றும் பனிப்பொழிவு என அடுத்தடுத்து இருப்பதால் செடிக்கொடிகள் மற்றும் சில இடங்களில் மரங்கள் வாடி வருகிறது. தற்போது நிலவும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், பல கிராமங்களில் சாலையோரம் இருக்கும் செடி, கொடிகள் காய்ந்து அதிலிருந்து இலைகள் உதிர்ந்து விழுகிறது. மழை இருக்கும்போது, பசுமையுடன் காட்சி அளித்த செடி, கொடிகள் தற்போது கருகி, காய்ந்துள்ளது. கோட்டூர்ரோடு, பாலக்காடுரோடு, கோவை ரோடு மற்றும் பல்லடம் ரோடு செல்லும் வழியில் உள்ள பெரும்பாலான இடங்களில் செடி, கொடிகள் காய்ந்து பரிதாபமாக உள்ளதை காணமுடிகிறது.