மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், சோலாப்பூர், புனே மாவட்டங்களில் வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வெங்காய மார்க்கெட்டான லாசல்காவ் மார்க்கெட்டும் நாசிக் மாவட்டத்தில் தான் இருக்கிறது. தற்போது புனே மற்றும் நாசிக்கில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சோலாப்பூர் மாவட்டம் பார்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர துகாராம் சவான் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோலாப்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தார். மார்க்கெட்டில் இருக்கும் சூர்யா டிரேடரிடம் வெங்காயத்தை கொடுத்து விற்பனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் சவான் கொண்டு வந்த வெங்காயத்தின் விலை கிலோ ஒரு ரூபாய் என்ற அளவில் தான் விற்பனையானது. இதன் மூலம் கிடைத்த 512 ரூபாயில் கமிஷன், இறக்கும் கூலி, வெங்காயத்தை எடை போடுவத்தற்கான கட்டணம் என்று 509.50 ரூபாயை பிடித்தம் செய்து கொண்டு வெறும் 2 ரூபாயிக்கு காசோலை கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் 15 நாட்கள் பின் தேதியிட்டு காசோலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயியை வியாபாரி அவமானப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வியாபாரி கொடுத்த காசோலை சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இது குறித்து முன்னாள் எம்.பி.ராஜு ஷெட்டி கூறுகையில், இந்த அளவுக்கு வெங்காயம் விலை குறைந்தற்கு இடைத்தரகர்கள்தான் காரணமாகும். இந்த அளவுக்கு விலை குறைந்தால் எப்படி விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும்.

அதிகப்படியான வெங்காயத்தை அரசு ஏற்றுமதி செய்யவேண்டும். பணவீக்கம் என்ற பெயரில் விவசாயிகளை அரசு மன உலைச்சலுக்கு உள்ளாக்குகிறது என்று தெரிவித்தார். இது குறித்து விவசாயி சவான் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ 20 ரூபாயிக்கு விற்றது. இந்த ஆண்டு 500 கிலோ வெங்காயத்தை விளைவிக்க 40 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளேன். கடந்த 3-4 ஆண்டில் விதை, உரம், பூச்சி மருந்துகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்தார்.
இது குறித்து வெங்காயத்தை வாங்கிய வியாபாரி நாசிர் கலிபா கூறுகையில், “வெங்காயம் விற்ற பிறகு அதற்கான காசோலை கம்ப்யூட்டர் முறையில் வழங்கப்படுகிறது. எந்த தொகையாக இருந்தாலும் பின் தேதியிட்டு கொடுக்கப்படுவதுதான் வழக்கம். விவசாயி சவான் கொண்டு வந்த வெங்காயம் மிகவும் தரம் குறைந்தது. ஆனால் இதற்கு முன்பு அவர் கொண்டு வந்த தரமான வெங்காயம் கிலோ 18 ரூபாயிக்கு விற்பனையானது.

அதற்கு பிறகு மீண்டும் ஒரு முறை கொண்டு வந்த வெங்காயம் 14 ரூபாயிக்கு விற்பனையானது என்று தெரிவித்தார். விளைவிக்கப்படும் வெங்காயத்தில் 25 சதவீதம் மட்டும்தான் நல்ல தரத்துடன் இருக்கும். 30 சதவீதம் நடுத்தரமான தரத்துடன் இருக்கும். எஞ்சிய வெங்காயம் தரம் குறைந்தது ஆகும். வெங்காயம் விளைச்சல் அதிகரித்து இருப்பதால் கடந்த இரண்டு மாதத்தில் லாசல்காவ் மார்க்கெட்டில் 70 சதவீதம் அளவுக்கு விலை குறைந்துள்ளது. தற்போது விளைவிக்கப்பட்டுள்ள வெங்காயத்தின் ஆயுட்காலம் மிகவும் குறைவு ஆகும். ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தால் அவை அழுகத்தொடங்கிவிடும். எனவே விளைவிக்கப்படும் வெங்காயம் முழுவதையும் விவசாயிகள் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துவிடுகின்றனர். இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. வழக்கமாக லாசல்காவ் வெங்காய மார்க்கெட்டிற்கு இந்த நேரத்தில் 15 ஆயிரம் குவிண்டால் வெங்காயம் தான் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் இப்போது 30 ஆயிரம் குவிண்டால் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு குவிண்டால் விலை 1850 ரூபாயிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு அது வெறும் 550 ஆக சரிந்துள்ளது.” என்றார்.