புதுச்சேரி: புதுச்சேரியில், ஆன்மிக ஹெலிகாப்டர் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கெங்கவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவில், காசியைவிட புகழ்பெற்றதாக போற்றப்படுகிறது.
இந்நிலையில், புனிதமான சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 15ம் தேதியன்று துவங்கும் புஷ்கரணி திருவிழா, தொடர்ந்து 15 நாட்களுக்கு நடக்கிறது. இதில், புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்கரணி திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலை 6:30 மணியளவில் கங்கா ஆரத்தி எனப்படும் சங்கராபரணிக்கு ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
புஷ்கரணி திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் ஆற்றில் புனித நீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் பல்வேறு திருப்பணிகளும் துவக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோவில் வளாகத்தில் 80 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிவன் சிலை அமைக்கும் பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து திருக்காஞ்சிக்கு பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக, ஆன்மிக ஹெலிகாப்டர் சேவையை ஆரம்பிப்பதற்கான ஆயத்தப் பணிகளை அரசு துவக்கி உள்ளது.

உப்பளம் துறைமுக வளாகத்தில் ஹெலிபேடு உள்ளது. பயன்படுத்தப்படாமல் பாழடைந்து வரும் இந்த ஹெலிபேடை புதுப்பித்து, இங்கிருந்து திருக்காஞ்சிக்கு ஹெலிகாப்டர் சேவையை துவங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, திருக்காஞ்சியில் புதிதாக ஹெலிபேடு அமைக்கும் பணிகள் விரைவில் துவங்குகிறது.
குஜராத் மாநிலத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை ஹெலிகாப்டர் மூலமாக சுற்றி பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல குறைந்த கட்டணத்தில் ஆன்மிக ஹெ லிகாப்டர் சேவையை புதுச்சேரியில் துவங்குவதற்கு ஆலோசனைகள் நடந்து வருகிறது.
உப்பளத்தில் இருந்து திருக்காஞ்சிக்கு செல்ல 15 நிமிடங்கள், அங்கிருந்து உப்பளம் திரும்ப 15 நிமிடங்கள், கோவிலில் தரிசனம் செய்வதற்கு 30 நிமிடங்கள் என, 1 மணி நேரத்துக்கு ஹெலிகாப்டர் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement