புதுடெல்லி: 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். இதில் இதுவரை இல்லாத வகையில் கல்விக்கு மத்திய அரசு 1.12 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 8.2 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில் ‘இளைஞர் சக்தியைப் பயன்படுத்துதல் – திறன் மேம்பாடு மற்றும் கல்வி’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: இந்தியாவின் அமிர்த காலத்தில் திறனும் கல்வியும் இரண்டு முக்கிய கருவிகளாக விளங்குகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குடன் நாட்டின் அமிர்த யாத்திரையை இளைஞர்கள் வழிநடத்துகின்றனர். கல்வி முறையை மேலும் நடைமுறை மற்றும் தொழில் சார்ந்ததாக மாற்றுவதன் மூலம் இந்திய கல்வி முறையின் அடித்தளத்தை இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வலுப்படுத்துகிறது.
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சாத்தியங்கள் உள்ளன. இளைஞர்களின் திறமை மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப கல்வியும் திறன் மேம்பாடும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக கல்வி, திறன் மேம்பாடு ஆகிய இரண்டுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அறிவை எங்கிருந்தும் பெறுவதை உறுதிசெய்யும் கருவிகளில் அரசு கவனம் செலுத்துகிறது 3 கோடி உறுப்பினர்களை கொண்ட மின்-கற்றல் தளமான ‘ஸ்வயம்’ இதற்கு உதாரணமாக விளங்குகிறது. மெய்நிகர் ஆய்வகங்கள், தேசிய டிஜிட்டல் நூலகம்ஆகியவை அறிவுக்கான மிகப்பெரிய ஊடகமாக மாறி வருகின்றன
குழந்தைகள் தற்போது டிடிஎச் சேனல்கள் மூலம் உள்ளூர் மொழிகளில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர், மேலும் இதுபோன்ற டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான முயற்சிகள் நாட்டில் நடந்து வருகின்றன,
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.