தி.நகர் ஸ்கைவாக்: திறப்பு விழா எப்போது? சென்னை மாநகராட்சி சூப்பர் தகவல்!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மேம்பாலம், நடை மேம்பாலம், சாலை விரிவாக்கம், புதிய போக்குவரத்து வசதிகள் என தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தியாகராய நகரில் கட்டமைக்கப்பட்டு வரும் ஆகாய நடை மேம்பாலம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் வரை செல்கிறது.

தியாகராய நகர் ஸ்கைவாக்

இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 600மீட்டர் நீளமும், 4.20 மீட்டர் அகலமும் கொண்டது. மழை, வெயில் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் லிப்ட் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

என்னென்ன வசதிகள்

ஒப்பனை அறைகள் அமைக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பயணத்தை எளிமைப்படுத்தும் வகையில் பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடை மேம்பாலத்தை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை போடுவதை தடுக்கும் வகையில் ரோந்து பணிகளில் போலீசாரை ஷிப்ட் அடிப்படையில் பணியில் அமர்த்தவும் ஆலோசித்து வருகின்றனர்.

பணிகள் தாமதம்

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த நடை மேம்பாலப் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக நெருக்கடிகளை சந்தித்தது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை, மேம்பால திட்ட வடிவமைப்புகளில் மாற்றம், ஊழியர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் பணிகள் முடிவடைவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

சென்னை மாநகராட்சி தகவல்

கடந்த சில மாதங்களாக பணிகள் வேகமெடுத்துள்ளன. 90 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா எப்போது? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும். அதன்பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேம்பாலப் பணிகள்

இதுதவிர திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் 43.46 கோடி ரூபாய் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே கொளத்தூர் பிரதான சாலை – ஐ.சி.எஃப் சாலையை இணைக்கும் வகையில் இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு 61.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு வழி மேம்பாலமாக அமைக்கப்படுகிறது. 500 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. மேற்குறிப்பிட்ட பாலங்களில் தற்போது சாய் தளங்கள் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.