சென்னையில் இருந்து மதுரைக்கு அதிவேக ரயிலான தேஜஸ் ரயில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டுவரும் இந்த ரயில், பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காலை டீ, காபி, படிப்பதற்கு தமிழ், ஆங்கில செய்தி தாள்கள், சிற்றுண்டி போன்றவை வழங்கப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணிநேரத்தில் செல்லும் இந்த தேஜஸ் ரயில் திருச்சி ஜங்சனில் மட்டுமே நின்று செல்லும். தேஜஸ் ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரயிலில் பல மாதமாக இடங்கள் நிரம்பாமல் இருந்துள்ளது. இதன்மூலம், ரயில்வேக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய் இழப்பை தவிர்ப்பதோடு, தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயிலை நிறுத்த ரயில்வே வாரியத்துக்கு 2019 – 2020 காலகட்டத்தில் 6 முறை பரிந்துரைக் கடிதங்களை அதிகாரிகள் அனுப்பினர். அதற்கு ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது.
தாம்பரத்தில் தேஜஸ் ரயிலை நிறுத்துவது தொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக ரயில்வே வாரியம் முடிவு எடுக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆன,சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இன்று (பிப்.26) முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.