மும்பை : மஹாராஷ்டிராவில், பணத்தை தண்ணீராகச் செலவழிக்கும் மனைவிக்கு பாடம் புகட்டுவதற்காக, 44 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்த நபரின் நாடகம் அம்பலமானதால், தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
விசாரணை
இங்கு, அந்தேரி பகுதி யைச் சேர்ந்தவர் அமித் முகம்மது வோரா, 30, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சமீபத்தில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அவர் ஒரு புகார் அளித்தார்.
அதில், ‘துபாயில் உள்ள என் மாமியார் 44 லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார். அந்த பணத்துடன் நானும், என் தந்தையும் வந்தபோது, ‘போலீசார் போல் நடித்த இருவர் வழிமறித்தனர். மோட்டார் சைக்கிளில் அவர்கள் பணப்பெட்டியை பறித்து தப்பிவிட்டனர்’ என தெரிவித்திருந்தார்.
உடனடியாக போலீசார் வழக்கு பதிந்து, வோரா குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் இச்சம்பவம் பதிவாகிஉள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.
ஆனால், அம்மாதிரி எந்த சம்பவமும் நடக்க வில்லை எனத் தெரியவந்தது.
இது குறித்து வோராவிடம் போலீசார் விசாரித்த போது, அவர் வேறொரு இடத்தில் சம்பவம் நடந்ததாக சொல்லி, கதையையும் மாற்றிக் கூறினார்.
பின், போலீசார் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினர். அவர், வேறு விதமாக சம்பவத்தை விவரித்துள்ளார்.
இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், இருவரிடமும் கடும் விசாரணை மேற்கொண்டதில், பணம் திருடப்பட்டதாக நாடகமாடியதை வோரா ஒப்புக்கொண்டார்.
பொய் புகார்
‘என் மனைவி பணத்தை தண்ணீராகச் செலவழிப்பதால், அவருக்கு சரியான பாடம் புகட்டி பணத்தின் அருமையை தெரிய வைப்பதற்காக, இவ்வாறு பொய் புகார் அளித்தேன்’ என போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
வீட்டின் மீது ‘பைனான்ஸ்’ செய்தவர் முழு தொகை கொடுக்காமல் மிரட்டல்
சென்னை: வீட்டை வாங்கியவர், பேசியபடி மீதி பணம் கொடுக்காமல் அதை கைப்பற்ற முயல்வதாக, இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி விளக்கம் அளித்தார்.
சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 37வது தெரு, டி.வி.எஸ்., அவென்யூவைச் சேர்ந்தவர் எஸ்.பார்த்தசாரதி; ஹிந்து மக்கள் கட்சி மாநில இணை செயலர்.
இவரது வீட்டை, சவுகார்பேட்டை, ரமணன் சாலையை சேர்ந்த, நிதி நிறுவன உரிமையாளர் கமல் சந்த் ஜெயின், 61, என்பவர், 2015ம் ஆண்டு, 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதில் வசித்து வந்த பார்த்தசாரதி, வீட்டை விற்பனை செய்த பிறகும், வெளியேறாமல் ஆக்கிரமித்துள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ஜெ.ஜெ., நகர் போலீசிலும், கமல் சந்த் ஜெயின் புகார் செய்தார். அதை, போலீசார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து, பார்த்தசாரதி, தன் தரப்பு குறித்த விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கமல்சந்த் ஜெயின் தவறான வகையில், பொய் புகார் அளித்துள்ளார். என் கட்டுமான தொழில் தேவைக்காக, கமல்சந்த் ஜெயின், பல ஆண்டுகளாக எனக்கு ‘பைனான்ஸ்’ செய்து வந்தார்.
அந்த பணத்தின் உத்தரவாதத்திற்காக, 3 கோடி ரூபாய் மதிப்பிலான என் சொத்திற்கு, 2.50 கோடி ரூபாய் பைனான்ஸ் கொடுப்பதாக கூறினார். ஆனால், 85 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு, வீட்டை கிரையம் செய்த பின், மீதி பணத்தை தருவதாக கூறினார். ஆனால், இதுவரை மீதி பணத்தை கொடுக்காமல், என் சொத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க, என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார்.
மேலும், அவர் தரப்பை சேர்ந்த யார் மீதும், ‘மதவாதத்தை துாண்டும்’ வகையிலான, எந்த புகாரையும், நான் போலீசில் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பஸ்சில் போன் பறிப்பு பெண் உட்பட 2 பேர் கைது
கோட்டூர்புரம்: சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் சாலமன், 19; கல்லுாரி மாணவர். இவர், நேற்று முன்தினம் பேருந்தில் செல்லும்போது, கோட்டூர்புரம் பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது மொபைல் போன் திருடப்பட்டது.
சாலமன் அளித்த புகாரின்படி, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரை சேர்ந்த சூர்யகுமார், 23, என்பவரை கைது செய்தனர். அவரின் கூட்டாளி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் தப்பிவிட்டார். திருடும் மொபைல்போனை சுரேஷின் மனைவி கவிதா, 23, வாங்கி விற்பாராம். போலீசார் அவரையும் கைது செய்தனர்.
15 கிலோ கஞ்சா பறிமுதல்
பரங்கிமலை : மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பேருந்து நிறுத்தத்தில், பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த பெண்ணை விசாரித்தபோது, 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. ஒடிசா மாநிலம், பொமபுரா பகுதியைச் சேர்ந்த கீதா, 35, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பதும் தெரிந்தது. போலீசார், கீதாவை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 37. இவர், வீட்டில் வைத்து, கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். நேற்று, வீட்டை சோதனை செய்த போலீசார், 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மணிகண்டனையும் கைது செய்தனர்.
அம்பத்துார் தொழிற்பேட்டை பேருந்து நிலையம், ‘டாஸ்மாக்’ கடை அருகே நின்ற நபரை, தனிப்படை போலீசார் பிடித்தார். அவரது பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போனாங்க தாரா பாபு, 19, என தெரிய வந்தது. விசாரணைக்கு பின், மது விலக்கு போலீசார் அவரை கைது செய்தனர்.
பணியாளரை கொலை செய்த சினிமா ‘ பைனான்சியர் ‘ சரண்
சென்னை : சென்னையில், தன்னிடம் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை அறையில் பூட்டி வைத்து, அடித்து உதைத்து, கொலை செய்த சினிமா ‘பைனான்ஷியர்’ மற்றும் துணை நடிகர் உட்பட நான்கு பேர் போலீசில் சரணடைந்தனர்.
![]() |
சென்னை, மதுரவாயல் அடுத்த நொளம்பூர், எஸ்.பி., கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், 48. இவர், சினிமா பைனான்சியர் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவரது வீட்டில் இருந்து, கடந்த 23ம் தேதி இரவு, ஒருவரது அழுகையும், அலறல் சத்தமும் கேட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நொளம்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, குறிப்பிட்ட வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவாகி இருந்தனர்.
கடத்தல்
வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ரத்தக்கறைகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, சினிமா பைனான்சியர் வெங்கட்ராமனை, நொளம்பூர் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியில் வந்தது.
வெங்கட்ராமன் மற்றும் அவரிடம் பணிபுரியும் மதுரவாயலைச் சேர்ந்த நவீன், 47, சரவணன், 29, திலீப், 30, ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த கலெக் ஷன் ஏஜன்டாக பணிபுரியும் பாபுஜி, 50, என்பவரை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, நொளம்பூர் காவல் நிலையத்தில் நான்கு பேரும் சரணடைந்தனர்.
அதேநேரம், கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார், மாங்காடு போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்திற்கு சென்று கருகிய நிலையில் கிடந்த பாபுஜியின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாவது:
சினிமா பைனான்சியரான வெங்கட்ராமனிடம்,சிலர் கலெக் ஷன் ஏஜன்டாக பணிபுரிந்து வருகின்றனர். இதில், அயனம்பாக்கத்தைச் சேர்ந்த பாபுஜியும் ஒருவர்.
இவர் வெங்கட்ராமனிடம் 10 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை கையாடல் செய்ததாகவும், வெங்கட்ராமன் குறித்து, அவதுாறாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
தலைமறைவாக இருந்து வந்த பாபுஜி, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருப்பதை அறிந்து சென்ற வெங்கட்ராமன், சரவணன், திலீப், நவீன் ஆகியோர், அவரை 23ம் தேதி காரில் கடத்தி சென்றனர்.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
வெங்கட்ராமனின் வீட்டின் மாடியில் உள்ள அறையில் வைத்து, நகை, பணம் குறித்து கேட்டு, இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதில், பாபுஜி நள்ளிரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் அதிகாலையில் உடலை காரில் எடுத்து சென்று, போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள குப்பை கிடங்கில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
துணை நடிகராம் இவர்!
இந்த கொலை வழக்கு, முதலில் நொளம்பூர் போலீசார் விசாரித்த நிலையில், பாபுஜி கடத்தப்பட்ட இடம் கோயம்பேடு காவல் நிலைய எல்லை என்பதால், இந்த வழக்கு கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.கைது செய்யப்பட்ட நவீன், சினிமா துறையில் துணை நடிகராக உள்ளார். சரவணன் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது.
மாமியாரை குத்தி கொன்ற மருமகன் தலைமறைவு
நாகதேவனஹள்ளி : குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்று விட்டு மருமகன் தலைமறைவானார்.
![]() |
பெங்களூரு நாகதேவனஹள்ளியில் வசித்தவர் எழிலரசி, 48. இவர் தனது மகளை திவாகர், 32 என்பவருக்கு, திருமணம் செய்து கொடுத்தார்.
தம்பதிக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். குடும்ப தகராறில் திவாகரை, அவரது மனைவி பிரிந்தார். தன் மகளுடன் தனது தாய் வீட்டில் வசித்தார்.
இதற்கிடையில், திவாகர், தன் மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். இதனால், கோபமடைந்த எழிலரசி, நேற்று முன்தினம் திவாகருடன் தகராறு செய்தார். அப்போது எழிலரசியை, மருமகன் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார். அங்கு சென்ற கெங்கேரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் குடும்ப தகராறில், கொலை நடந்தது தெரிந்தது. தலைமறைவாக உள்ள திவாகரை போலீசார் தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்