கடந்த முறை 8,904 வாக்குகள் வித்தியாசம்தான்! இந்த முறை காங். அமோக வெற்றி பெற இதுவே காரணம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.
திருமகன் ஈ.வெ.ரா மரணமும், இடைத்தேர்தலும்!
ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா., உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி 4-ம் தேதி காலமானார். இதையடுத்து, அத்தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், வெற்றி மூலம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 1,09,959 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு 43,553 வாக்குகள் கிடைத்தன.
கடந்த தேர்தல் நிலவரம் என்ன?
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா., 67 ஆயிரத்து 300 வாக்குகள்பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
image
58 ஆயிரத்து 396 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜாவை 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்திருந்தார். கடந்த முறை 10 ஆயிரத்திற்கும் கீழ் வித்தியாசம் இருந்த நிலையில் தற்போது 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி கிட்டியுள்ளது. 
இந்த அமோக வெற்றி சாத்தியமானது எப்படி?
இந்தத் தேர்தலில் போட்டியிட்டது என்னமோ காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இருந்த போதிலும் திமுக தங்கள் கட்சி வேட்பாளரே போட்டியிட்டது போல் பணிகளை மேற்கொண்டனர். அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீயாய் வேலை செய்தனர். திரும்பிய திசையெங்கும் திமுக நிர்வாகிகள் கூட்டம் அலைமோதியது. வாக்காளர்கள் பெரும்பான்மையாளர்களை அவர்கள் சந்தித்து வாக்குகளை உறுதி செய்தனர். கிட்டதட்ட இது திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா தான். ஏன் அதை விட கூடுதலாக திருவிழா போல் தேர்தல் பரப்புகளை நடைபெற்றன. 
ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இந்த வெற்றியை தன்னுடைய கவுரவ பிரச்னையாக திமுக கருதியது. அதனால், அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் திமுகவினர் பணிகளை முடுக்கிவிட்டனர். அதன் விளைவாக, அதிமுக வேட்பாளர் டெபாசிட் வாங்கிய போதும் கிட்டதட்ட 66,406 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி வாகை சூடியுள்ளார். 
இந்த ஒன்று போதுமே!
image
கடந்த தேர்தலை காட்டிலும் இந்த இடைத்தேர்தல் எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்பதை வாக்குப்பதிவை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம். கடந்த முறை மொத்தமாக 1,52,143 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த முறை மொத்தமாக கிட்டதட்ட 1,70,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த முறையை விட சுமார் 17 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.