மும்பையைச் சேர்ந்த ரிதா ஜோஷி என்பவருக்கு, 2018 செப்டம்பரில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் இக்குழந்தைகள் 30 வாரங்களிலேயே பிறந்திருக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.
ஜோஷி, 2007-ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை எடுத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் அதற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தி புதுப்பித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய இரட்டைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆன செலவு ரூ.11 லட்சத்தை கிளெய்ம் செய்ய காப்பீடு நிறுவனத்திடம் விண்ணப்பித்த போது, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான காப்பீடு குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் பொருந்தாது எனக் கூறி கிளெய்ம் பணத்தை மறுத்துவிட்டது.

இதையடுத்து, ஜோஷி நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றத்தின் தரப்பில் மருத்துவர்களிடமும், காப்பீட்டு நிறுவனத்திடமும் விசாரணை செய்யப்பட்டது. குறை மாதத்தில் பிறந்ததால் குழந்தைகளின் நலனில் சிக்கல் வந்திருக்கலாம், சரியான காலத்தில் பிறந்திருந்தால் சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருக்கின்றனர் மருத்துவர்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிமன்றம் கூறியதாவது: காப்பீடு எடுப்பவர் அதற்கான பிரீமியம் தொகையைத் தவறாமல் செலுத்தி வருவது ஆபத்து காலத்தில் உதவும் என்பதற்காகத்தான். ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்கும்படி காப்பீட்டு நிறுவனங்கள் ஏதேனும் காரணம் காட்டி கிளெய்ம் பணத்தைத் தருவதைத் தவிர்க்கவே முயல்கின்றன. இது சரியல்ல. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான காப்பீடு, பிறக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் பொருந்தும்.
குறைமாதத்தில் பிறந்தால் புதிதாகப் பிறந்த குழந்தை இல்லையா, அதென்ன பழைய குழந்தையா? எனவே இதுபோல எதையாவது காரணம் காட்டி கிளெய்ம் பணத்தைத் தர மறுக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே குறைமாதத்தில் குழந்தைகள் பிறந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தவருக்கு காப்பீட்டு நிறுவனம் மேலும் வேதனை தந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு ஆன செலவுத் தொகை ரூ.11 லட்சத்தையும், 2018 டிசம்பரிலிருந்து இன்று வரை 9 சதவிகித வட்டி கணக்கிட்டு காப்பீடுதாரருக்கு வழங்க வேண்டும். மேலும் கூடுதலாக ரூ.5 லட்சம் அபராதமாக வழங்க வேண்டும். அனைத்து தொகையையும் 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.