திருமணஞ்சேரி: களைகட்டிய ஓலைச்சப்பர வீதியுலா; பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபாடு!

பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமகப் பெருவிழா நடைபெற்றுவருகிறது. விழாவின் ஐந்தாம் நாள் உற்சவமாகத் தெருவடச்சான் என்னும் ஓலை சப்பரம் வீதியுலா நிகழ்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற, பழைமையான திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையைத் திருமணம் செய்து கொண்டதாகத் தலபுராணம் கூறுகிறது.

திருமணஞ்சேரி

திருமணத்தடை உள்ளவர்கள, இங்கு தினமும் நடைபெறும் திருமணப் பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் மாசிமகப் பெருவிழா கடந்த 25 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளான நேற்றிரவு பஞ்ச மூர்த்திகளின் தெருவடச்சான் ஒலைசப்பரங்கள் வீதியுலா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதர் சுவாமி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர், அஸ்திரதேவர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு தீபாரதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமி தன்னைத் தானே பூஜித்தல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ஆலயத்தைச் சுற்றி வந்து சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் தெருவடச்சான் ஓலை சப்பரங்களில் எழுந்தருளினர்.

திருமணஞ்சேரி

மயில் வாகனத்தில் முருகப்பெருமானும், மூஷீக வாகனத்தில் விநாயகரும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருள அனைத்து மூர்த்திகளுக்கும் மகாதீபாரதனை நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்திகளின் தெருவடச்சான் ஒலைசப்பரம் வீதியுலா நடைபெற்றது.

வீதியுலா வந்த மூர்த்திகளுக்கு பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் தீபாராதனை செய்து வழிபட்டனர். வருகின்ற ஐந்தாம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டமும் ஆறாம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.