திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடசேரிரோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்சேகர் மகன் ரோஷ்னேஷ். டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் புதுக்கோட்டை மாவட்டம் கொண்டையன் தெரு பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
நாளடைவில் இந்தக் காதல் விவகாரம் சுகன்யாவின் பெற்றோருக்குத் தெரியவர அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ரோஷ்னேஷ் மற்றும் சுகன்யா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.
இருப்பினும், சுகன்யாவின் பெற்றோர் கணவர் ரோஷ்னேஷிடம் இருந்து அவரை பிரித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் ரோஷ்னேஷ் இது தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் தானும், சுகன்யாவும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால், சுகன்யாவின் பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகன்யாவின் பெற்றோரிடம் பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் படி போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சுகன்யாவின் பெற்றோர் மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இதையடுத்து, போலீசார் சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.