தைவானுக்கு நவீன ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா; கொந்தளிக்கும் சீனா.!

சீனாவின் அண்டை தீவு நாடான தைவானுக்கு, 619 மில்லியன் டாலர் மதிப்பில் நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவில் அரசப்படைகளுக்கும் பொதுவுடமைவாத கம்யூனிச படைகளுக்கும் இடையே போர் நடந்தது. அதைத் தொடர்ந்து போரில் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிச படைகள் 1949ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றின. போரில் தோற்ற கோமின்டாங் என்று அழைக்கப்படும் தேசியவாத அரசாங்கம் தைவானுக்கு தப்பி ஓடி, அங்கு அரசமைத்தது. அந்த வகையில் சீனாவிடம் பிரிந்து சென்ற மக்களால் தைவான் ஆளப்பட்டுவருகிறது.

தைவானை இறையாண்மைமிக்க சுதந்திர நாடாக மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்தன. ஆனால் சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என சீனா ஆக்கிரமிப்பு வேளைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு ராணுவ விமானங்களை அனுப்பியதன் மூலம் சீனா அதன் அழுத்தத்தை அதிகரிக்க முயன்றது. அதன்படி, அக்டோபர் 2021ல், ஒரே நாளில் 56 ஊடுருவல்கள் என்ற அளவில் சீனாவின் ஊடுருவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. இத்தகைய நிலையில் தைவானுக்கு அமெரிக்கா உதவி செய்வதாக அறிவித்தது.

அதன்படி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலொசி தைவானுக்கு பயணம் செய்தது, சீனாவிற்கு ஆத்திரத்தை மூட்டியது. தொடர்ந்து அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்கும் என கூறியதால் சீனா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் கசந்தது. இந்தநிலையில் சீனா தனது இறையாண்மை உரிமைகோரல்களை வலியுறுத்த முற்படுகையில், தைவான் அருகே கடந்த மூன்று ஆண்டுகளாக சீன இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுவதாக தைவான் புகார் அளித்துள்ளது.

தைவான் தனது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவிலான சீன விமானப்படை ஊடுருவல்கள் நடந்துள்ளதாக, தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 21 விமானங்களைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளது.

தைவானுடன் கூட்டு சேர்வதை எதிர்த்து அமெரிக்காவை எச்சரிப்பதற்கும், அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க முயல்வதால், அப்பகுதியில் அதன் நடவடிக்கைகள் நியாயமானவை என்று சீனா கூறியுள்ளது.

இப்படி சீனாவின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில், தைவானுக்கு 619 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நவீன ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. F-16 கடற்படைக்கான ஏவுகணைகள் உட்பட 619 மில்லியன் டாலர் புதிய ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

200 விமான எதிர்ப்பு அதிநவீன வான்-விமான ஏவுகணைகள் (AMRAAM) மற்றும் 100 AGM-88B HARM ஏவுகணைகளை உள்ளடக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

“முன்மொழியப்பட்ட விற்பனையானது அதன் வான்வெளி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான இயங்குதன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான பெறுநரின் திறனுக்கு பங்களிக்கும்” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவின் ஏவுகணைகள் “கம்யூனிஸ்ட் இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை சமாளிக்கவும், வான்வெளியை திறம்பட பாதுகாக்கவும் உதவும் மற்றும் பாதுகாப்பு இருப்புகளை மேம்படுத்தும் என்று கூறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.