`மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் கிடையாது; ஏமாறவேண்டாம்' – மெட்ரோ நிறுவனம் எச்சரிக்கை

சென்னையின் பிரதான போக்குவரத்து சேவையில் மெட்ரோ ரயிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், “சில நபர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு பரிசோதகராக மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை என்ற பெயரில் அபராதம் வசூலிப்பதாக நிர்வாகத்துக்குத் தகவல் வந்திருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை என்ற பணியிடமே கிடையாது.

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை

பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பெயரில் விஷமத்தனமான செயலில் ஈடுபடும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயண அட்டைகள்/ டோக்கன்கள்/ க்யூ ஆர் குறியீடு போன்ற சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகள் மெட்ரோ ரயில் நிலையங்களிலுள்ள தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக மட்டுமே நுழையும்போதும், வெளியேறும்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக நுழையும்போதும்/ வெளியேறும்போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைந்திருக்கும் கட்டண அலுவலக அறைகளில் மட்டுமே அது சரிசெய்து தரப்படும். தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக மட்டுமே பயணச்சீட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதுதவிர வேறு எந்த வகையிலும் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவது இல்லை. மெட்ரோ ரயில் பயணிகளிடம் இதுபோன்ற அநாகரிகமான, விஷமத்தனமான செயலில் ஈடுபடும் நபர்கள்மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மெட்ரோ ரயில்

இதுபோன்று அநாகரிக செயலில் ஈடுபடும் சந்தேகப்படும் நபர்களைப் பயணிகள் கண்டறிந்தால், அவர்களும் அருகிலுள்ள காவல் நிலையம், மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளிக்கலாம். இதுபோன்று சந்தேகப்படும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது. மேற்கூறிய செயலைச் செய்யக்கூடிய நபர்களால் ஏமாற்றமடைபவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது” என்று கூறப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.