ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 தொகுதிகள் உள்ளன. இதில் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் லிங்டாக் கடந்த 20-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதன்காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதர 59 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தின.
ஆனால் தேர்தலுக்கு முன்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து ஏற்பாடு ஏற்பட்டு, தனித்தனியாக போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி சார்பில் 57 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பாஜக, காங்கிரஸ் சார்பில் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனநாயக கட்சி 11, காங்கிரஸ் 5, திரிணமூல் காங்கிரஸ் 5, மக்கள் குரல் கட்சி 4, மக்கள் ஜனநாயக முன்னணி 2, பாஜக 2, மலைப்பகுதி மக்கள் ஜனநாயக முன்னணி 2 தொகுதிகளிலும் சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
முதல்வர் கான்ராட் சங்மா, தெற்கு துரா தொகுதியில் 10,090 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மை இல்லாததால் ஆளும் தேசிய மக்கள் கட்சி பிராந்திய கட்சிகளோடு இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார். மேலும், மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பாஜக ஆதரவு அளிக்கவும் கேட்டுக் கொண்டார். அதை பாஜக.வும் ஏற்றுள்ளது.