ஆவின் நிறுவனம் முகவர்கள் மூலம் தமிழக முழுவதும் உள்ள நுகர்வோர்களின் ஆதார் எண் சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மாதாந்திர கட்டணம் செலுத்தி பால் வாங்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் நிறுவனத்தின் நிரந்தர நுகர்வோர்களுக்கு ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆவின் பாலை சலுகை விலையில் பெற்று வருகின்றனர்.
ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்திய போதும் அதன் தரத்தின் மீது உள்ள நம்பிக்கையால் பொதுமக்கள் இன்றளவும் பால் வாங்கி செல்கின்றனர். நிரந்தர அட்டை மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சேகரிக்கப்படுவதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை கட்டாயம் மேற்கொள்ளுமாறு மாவட்டம் தோறும் அமைந்துள்ள மண்டல அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.