தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்ட தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்ட்டத்தில் புவி வெப்பமாதலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பணிகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திராவிட மாடல் என்பது “தேங்கிய குட்டையல்ல, காலத்திற்கேற்ப விழுமியங்களை எடுத்துக்கொண்டு உயிர்புடன் ஓடும் ஜீவநதி” என்று சொல்லி, காலத்திற்கேற்பே காலநிலை நிர்வாக குழு அமைத்து, இனிமேல் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் காலநிலை மாற்ற கண்ணாடி கொண்டு ஆய்வு செய்யப்படும்” என்று பேசினார்.
அதோடு நிற்காமல் ”நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அந்த வளர்ச்சி வளங்குன்றா, நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சி ஒரு கண் என்றால் காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண். ஆகவே இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தேவை” எனவும் பேசியிருக்கிறார்.
அட இந்த வரிகளை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே எனத் தோன்றும். ஆம் பல்வேறு மேடைகளில், போராட்டங்களில் பாமக தலைவர் அன்புமணி காலநிலை மாற்றம் குறித்து பேசியது என்பது நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
விவசாய நிலங்களை அழித்து செயல்பாட்டுக்கு வர இருக்கும் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை திட்டம், பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற திட்டங்களை எதிர்த்து நடத்திய பாமகவின் போராட்டங்களில் அன்புமணி தொடர்ந்து பேசி வருவது, முதல்வர் ஸ்டாலின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.
மேற்கண்ட திட்டங்களுக்கு மத்திய அரசுக்கு முழு ஆதரவை தமிழ்நாடு அரசு வழங்கிவரும் வேளையில், காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வரின் பேச்சு அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. முதல்வரின் பேச்சுக்கும், செயலுக்கும் தொடர்பு இருக்குமா? என்பது மேற்கண்ட திட்டங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தான் தெரிய வரும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். மேலும் இவ்வளவு பேசும் முதலவர் கடலில் பேனா சிலை வைக்க திட்டமிடுவது முரணாக இல்லையா எனவும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.