புதுடெல்லி: நாடு முழுவதும் இன்ப்ளூயன்சா ஏ துணை வகை வைரஸ் பரவலால் காய்ச்சல், இருமல் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், மக்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2, 3 மாதங்களாக இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எச்3என்2 எனும் இன்ப்ளூயன்சா ஏ துணை வகை வைரஸ் பரவல் காரணம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது. இருமலுடன் கூடிய காய்ச்சல் இதற்கு பொதுவான அறிகுறியாகும். காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.
காய்ச்சல் 3 நாட்களில் குறைந்தாலும், இருமல் 3 வாரங்கள் வரை நீடிக்கும் என இந்திய மருத்துவ சங்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இன்ப்ளூயன்சாவால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியிடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், கைகளை அடிக்கடி தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. காற்று மாசுபாடு காரணமாக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ், 15 வயதுக்கு உட்பட்டவர்களையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது.
காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதும் மக்கள் அமோக்சிலின், நோர்ப்ளோக்சசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்கின்றனர். இதுபோல் ஆன்டிபயாடிக் உட்கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டுமென இந்திய மருந்துவ சங்கம் எச்சரித்துள்ளது. இன்ப்ளூயன்சாவால் ஏற்படும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலிக்கு ஆன்டிபயாடிக் மருந்து தேவைப்படாது என்றும், மருத்துவர்களும் முறையான பரிசோதனை இன்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது என்றும் இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தி உள்ளது.