புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் நடத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்த வெளியில் பேரணி செல்ல போலீஸார் அனுமதி வழங்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஆர்எஸ்எஸ் சார்பில் பிப்.12, பிப்.19, மார்ச் 5 ஆகிய 3 தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி ஆஜராகி, “இந்த விவகாரத்தில் சட்டம்- ஒழுங்கைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குத்தான் உள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கொண்ட மைதானங்களில் பேரணியை நடத்திக் கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் அறிக்கையை புறக்கணித்து கேட்கும் இடங்களில் எல்லாம் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்திக் கொள்ள அனுமதி வழங்க முடியாது” என்றார்.
அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இதற்கு முன்பாக பேரணி நடத்தப்பட்ட எந்த இடங்களிலும் எந்தவொரு சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. தமிழக அரசு இந்த விவகாரத்தை தேவையில்லாமல் அரசியலாக்கி வருகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்பினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என தமிழக அரசு நினைக்கிறது. அப்படியென்றால் தமிழக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்குத்தான் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆர்எஸ்எஸ் பேரணியை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வழக்கின் காரணமாக மார்ச் 5 அன்று நடத்தவிருந்த அணிவகுப்பு பேரணியைக்கூட தள்ளி வைக்கிறோம்” என உறுதியளித்தார்.
அப்போது தமிழக அரசு தரப்பில், இதுதொடர்பாக அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறோம். அதைப்பார்த்து விட்டு இந்த நீதிமன்றமே முடிவு செய்யட்டும், என தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 17-க்கு தள்ளி வைத்துள்ளனர்.