தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் சுமார் ரூ. 180 கோடிக்கு விற்பனை நடைபெறுவது வழக்கம். தமிழக முழுவதும் அரசால் நடத்தப்படும் பார்கள் முழு அளவில் செயல்படாத நிலையிலும் மது விற்பனை குறைந்ததில்லை.
டாஸ்மாக் கடைகளில் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.1,000 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மது விற்பனை 5% அளவுக்கு குறைந்து காணப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 3% அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் பொழுது மது விற்பனை பாதியாக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 10% அளவிற்கு மது விற்பனை சரிந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மது விற்பனை குறைந்துள்ளதால் விற்பனையாளர்களிடம் டாஸ்மார்க் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் கடை பணியாளர்களிடம் விற்பனை குறைந்தது குறித்து காரணம் கேட்டு உள்ளனர். இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் போலி மது விற்பனை நடைபெறுவதாலும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாலும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானம் குறைந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் மது விற்பனை குறைவதற்கான காரணம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.