பிரபல புகைப்பட கலைஞரும், தி.மு.க. கட்சியின் சமூக வலைதள செயற்பாட்டாளருமான ஸ்டாலின் ஜேக்கப் இன்று விபத்தில் உயிரிழந்தார். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேளாண்மைத்துறை தனி நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, இவருக்கு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில், ஜேக்கப் மற்றும் அவருடன் வந்த ஜீவா என்பவரும் தூக்கி வீசப்பட்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி, விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு இருவரும் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. கட்சியின் சமூக வலைதள செயல்பாட்டாளர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
“நேற்று தான் அனைவரும் ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடினோம். திமுக கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதல்களையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.