பன்முகத் தன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்: கனிமொழி பேச்சு!

நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் பன்முகத்தன்மையை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையிலேயே புத்தகத் திருவிழா நடக்கிறது. நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் அரசாங்கத்தை கேள்வி கேட்க இலக்கியம், கலை ஆகியவை தூண்டுகோளாக உள்ளது என நெல்லை பொருநை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி
தெரிவித்துள்ளார்.

நெல்லை பொருநை 6ஆவது புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது .100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலையில் இலக்கிய விழா, கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. நேற்று 7- வது நாள் நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

பின்னர் விழாவில் கலந்து கொண்டு ஒருநாள் ஒரு புத்தகம் என்ற நிகழ்வில் புத்தகம் தயாரித்த பார்வையற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து விழாவில் பேசுகையில், பொருநை புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்வதை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகிறேன் . நெல்லை மக்களின் இலக்கிய படைப்புகள், அவர்களின் ஆர்வம், இலக்கியம் மீது கொண்டுள்ள காதல் ஆகியவற்றால் இந்த புத்தகத்திருவிழா சிறப்பாக நடக்கிறது. இந்த உணர்வை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லவேண்டும் என்றே நமது முதல்வர் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் பன்முத்தன்மையை மக்களிடம் எடுத்துக்கூறும் மையமாகவே புத்தகத் திருவிழா உள்ளது. நம் வாழ்வியல் முறையே பன்முகத்தன்மை கொண்டதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என சொல்லக்கூடிய சமூகத்தில் பன்முகத்தன்மை இருந்துள்ளது. இந்த சமூகம் கேட்க மறந்த கேள்விகளை முன்வைக்கும் கருவியாக இலக்கியம் உள்ளது. எது குறித்து கேள்வி கேட்க கூடாது என்று மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் அரசாங்கத்தை கேள்வி கேட்க தூண்டுவதாக இலக்கியம் , கலை ஆகியவை உள்ளது .

உலகில் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள இலக்கியமும் , புத்தகமும் ஆயுதமாக உள்ளது. வாழ்வியல் மாற்றங்களை அறிந்து கொள்ள ஒரே வழி புத்தங்களை படிப்பதுதான். எல்லா மாச்சரியங்களையும் கடப்பதுதான் இலக்கியத்தை உண்மையாக வரித்துக் கொண்டு இருப்பதுதான் நமது அடையாளம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் உரிமை , சம உரிமை, சமூகநீதி , இருக்கக்கூடிய சமூகத்தை, நாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் கார்திகேயன், உதவி ஆட்சியர் கோகுல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.