பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் இருப்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம் கருத்து

மதுரை: “பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் இருப்பதில் தவறில்லை” என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை தனியார் ஹோட்டலில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வைத்து வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை கணிக்க முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அணிகள் அமைந்தபின்னர்தான் தேர்தலை கணிக்கமுடியும். தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கென ஒரு இலக்கணம் உண்டு. அது பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே இருக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பூஸ்ட்டாக அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக அமையும் கூட்டணிக்கு காங்கிரஸ் அச்சாரமாக இருக்க வேண்டும். பிரதமர் வேட்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசப்படுவதில் தவறு கிடையாது. மாநில முதல்வராக இருந்தவர்கள் பிரதமராகியுள்ளனர். ஒரு மாநில முதல்வர், இந்தியாவுக்கு பிரதமராக வேண்டும் என அக்கட்சி எண்ணுவதில் எந்த தவறும் இல்லை.

ராகுல் காந்தியின் விடாமுயற்சியில் கட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும். இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுத வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனப்பான்மையில்தான் மத்திய பாஜக அரசு உள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. கீழடியை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது, சரித்திர கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும். கீழடியில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ளது. தமிழக முதல்வர் திறந்துவைப்பதை முழுமனதோடு வரவேற்கிறேன்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.