லண்டன்: இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலை ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூல் நிகழ்ச்சியில் ‘21-ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் தலைவர்களின் செல்போன்கள் இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது.
என்னுடைய செல்போனும் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, செல்போனில் பேசும்போது கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்தனர். என்னுடைய செல்போன்பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில், இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு என்று விவரிக்கப்பட்டுள்ளது, அந்த ஒருங்கிணைந்த அமைப்புக்கு பேச்சுரிமை தேவைப்படுகிறது. அந்த பேச்சுரிமைதான் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.