சேலம்: திருவனந்தபுரம் – கோரக்பூர் விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த 300 வடமாநில தொழிலாளர்களை, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் டிக்டெக் பரிசோதகர்கள், போலீஸார் இறக்கி விட்டு நடவடிக்கை எடுத்தனர்.
வடமாநிலங்களில் வரும் 8ம் தேதி ஹோலி பண்டிகை நடக்கவுள்ளதை அடுத்து, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பலரும் பண்டிகையை கொண்டாட வண்டி, சொந்த ஊர் திரும்பி கொண்டுள்ளனர். வடமாநிலம் செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக் கொண்டும், பலர் டிக்கெட் எடுக்காமலும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சேலம் வந்தடைந்த திருவனந்தபுரம் – கோரக்கூர் ரயிலில், முன்பதிவு பெட்டிகளில், வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டிருந்தனர். ரயில் புறப்பட்ட நிலையில், முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் எஸ்- 4 பெட்டியில் ஏறி பார்த்த போது, வடமாநில தொழிலாளர்கள் இருக்கையை ஆக்கிரமித்து அமர்ந்திருந்ததால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். சம்பந்தப்பட்ட எஸ்- 4 பெட்டிக்கு வந்த தலைமை டிக்கெட் பரிசோதகர் ராஜசேகர், ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, முறையாக முன்பதிவு டிக்கெட் எடுக்காமல் வடமாநில தொழிலாளர்கள் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது குறித்து பயணிகள் குற்றம்சாட்டினர். உடனடியாக அனைத்து முன்பதிவு ரயில் பெட்டிகளிலும் டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர் டிக்கெட்டை பரிசோதனை செய்தனர். இதில் 300 வடமாநில தொழிலாளர்கள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்தும், பலர் டிக்கெட் எடுக்காமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரயில் பெட்டிகளில் இருந்து வடமாநில தொழிலாளர்களை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் இறக்கிவிட்டனர். பின்னர், ரயில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. கீழே இறக்கிவிடப்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீஸார், ரயில்வே அதிகாரிகள் அடுத்தடுத்து வந்த ஜோலார்பேட்டை ரயில், சென்னை ரயில்களில் ஏற்றி ஊர் செல்ல வழிவகை ஏற்படுத்திக் கொடுத்தனர்.