வடமாநிலத்தவர்கள் குறித்த சர்ச்சை; பாஜகவின் பக்கா ப்ளான் அம்பலம்.!

முக ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்வதை தடுக்க பாஜக போட்ட பக்கா பிளான் தான் வடமாநிலத்தவர்கள் குறித்த பொய்ச் செய்திகளை பரப்பியது என அம்பலமாகியுள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மாநிலத்தின் தனிப்பெரும் எதிர்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியை அமைத்து முதலமைச்சர் ஆனார். அதைத் தொடர்ந்து பீகார் துணை முதலமைச்சரும் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பிற்படுத்த சமூக மக்களின் உரிமைகளை பேசி வருகிறார். பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அரசியல் பிரதிநிதியான லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தான் தேஜஸ்வி யாதவ் என்பது குறிப்பிடதக்கது.

இத்தகைய சூழலில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியை ஏற்படுத்த பீகாரின் முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்வும் முயற்சி செய்து வருகின்றனர். இந்தநிலையில் அதே சிந்தனை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சிறந்த நட்புறவில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் முக ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டிலும் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அந்தவிழாவில் பல முக்கிய எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் நடைபெற்றன. முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், பாஜகவை எதிர்க்கும் இந்திய அளவிலான தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்த மேற்கூறிய தலைவர்கள் பாடுபட்டு வருகின்றனர். அதற்கு சிறந்த களமாக முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழா அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அனைத்து தலைவர்களும், தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு திறன் உள்ளது, மேலும் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முக ஸ்டாலினால் தான் முடியும் எனவும் கூறினர்.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில், எதிர்கட்சிகளின் ஒற்றுமையை பேசிய முக ஸ்டாலின், இந்த விழா இந்தியாவின் மாற்று அரசியலில் தொடக்க விழா என கூறினார். இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும், அதிக நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தின் பிரதான எதிர்கட்சியான அகிலேஷ் யாதவ்வை கூட்டணிக்குள் கொண்டு வருவது உறுதியாகி விட்டது. உத்தரபிரதேசத்தை பெரிதும் நம்பியிருந்த பாஜகவிற்கு இது சம்மட்டி அடியாக இருந்தது.

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலைப் போல் வருகிற 2024ம் ஆண்டு தேர்தல் பாஜகவிற்கு அவ்வளவு எளிதாக இருக்காது என கூறப்படுகிறது. அதிலும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜகவின் தோல்வி உறுதி என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், எதிர்கட்சிகள் ஒருங்கிணைக்கும் பணிகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. இதை விரும்பாத பாஜக, எதிர்கட்சிகளிடையே பிளவை உண்டாக்க பலவாறு முயற்சி செய்தது.

லண்டன் பொண்ணு – தமிழ்நாட்டு மாப்பிள்ளை: இந்து முறைப்படி டும் டும்!

அந்தவகையில் தான் பீகார் மற்றும் உத்தரபிரதேச வாக்களர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த, தமிழ்நாட்டில் மேற்கூறிய மாநில கூலி தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பொய் செய்தி பரப்பபட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக இத்தகைய பொய் செய்திகளை, வதந்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும்பாலானோர் பாஜகவைச் சேர்ந்தவர்களே.

மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய பின்பும், பீகாரில் பாஜகவினர் அமலியில் ஈடுபட்டனர். ஆகவே எதிர்கட்சிகளின் கூட்டணியில் பிளவுகளை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டின் மாண்பை சிதைக்கவும், வடமாநிலங்களின் எதிர்கட்சிகளின் கூட்டணி குறித்து எதிர்மறையான கருத்துகளை விதைக்கவும் பாஜக போட்ட பக்கா பிளான் தான், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற பொய் செய்திகளை பரப்பியது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.