சென்னை: வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி வருகிறது. இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் வதந்தி பரப்பியவர்கள் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தெய்னிக் பத்திரிகையின் ஆசிரியர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் தன்வீர் போஸ்ட் பத்திரிகை உரிமையாளர் முகமது தன்வீர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாத் உமாராவ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். முழுமையாக வாசிக்க > வதந்தி பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள்; வட மாநில தொழிலாள தோழர்கள் அச்சம் அடைய வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்