புதுடெல்லி: பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஐ.நா. சபையில் சீர்த்திருத்தங் களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு குவாட் கூட்டமைப்பின் இதர 3 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.
பல்வேறு காரணங்களால் சர்வதேச விநியோக சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தபிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். விநியோக சங்கிலியை மேம்படுத்த வேண்டும். சர்வதேசடிஜிட்டல் துறையில் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன் மையை அதிகரிக்க வேண்டும். மேலும் சர்வதேச அளவில் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்த துறைகளில் குவாட் கூட்டமைப்பு கவனம்செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
குவாட் கூட்டமைப்பு வெளி யிட்ட அறிக்கையில், “இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் தன்னிச்சையாக எல்லையை மாற்ற அனுமதிக்க முடியாது. இந்த கடல் பகுதிகளில் ஐநா. சபையின் கடல் விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும். பதற்றத்தை அதிகரிக்க செய்யும் நடவடிக்கைகளில் எந்த நாடும் ஈடுபடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென் சீனக் கடல், கிழக்கு சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.