தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வட மாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. (1/4) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 4, 2023
அந்த பதிவில் ‘வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.