பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு, திமுக அரசு கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வட இந்தியர்களுக்கு எதிராகவும், ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிராகவும் பேசிய விவரங்களை அண்ணாமலை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், வதந்தியை பரப்பியதாக அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது சீமான் போன்ற பிரிவினை வாத தீய சக்திகள் தான்.
திரு அண்ணாமலை அவர்கள் இவர்களை போன்றவர்களால் தான் இப்படி ஒரு பிரச்சனை உருவாகி இருப்பதாக தெரிவித்தார். ஆகவே பாஜக மாநில தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து, திராவிட முன்னேற்றக் கழக அரசு எல்லை மீறுகிறது.
என்றைக்காக இருந்தாலும் உங்கள் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். இதற்கான பின்விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று எச் ராஜா தெரிவித்தார்.