கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. அனுமதி பெற்று தொழிற்சாலைகள் இயங்கிவரும் நிலையில், கடலூர் – புதுச்சேரி சாலையில் தமிழக எல்லை பகுதியான சிவனார்புரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மாசி மகா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் பட்டாசு வெடிப்பதற்கு இந்த தொழிற்சாலைக்கு ஆர்டர் வந்துள்ளது. இதற்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் அங்குள்ள தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக அந்த பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.
சுமார் 2.கி,மீ. தொலைவிற்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், பல கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இங்கு பணியில் இருந்த 10 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும், 80 சதவிகித படுகாயங்களுடன் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கோசலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.