புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடலூர் மாவட்டம் சிவனார்புரம் கிராமத்தில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் கொட்டகை நடத்தி வருகிறார். அங்கு மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் திடீரென பட்டாசு கொட்டகையில் பலத்த சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேர் சிக்கினார்.
பட்டாசு கொட்டகை முற்றிலுமாக எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பணியில் இருந்த மல்லிகா என்பவர் உயிரிழந்தார். புதுவை மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மருத்துவமனைகளுக்கும் பட்டாசு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தினால் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.
தீ விபத்து தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ரெட்டிசாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் இதுவரையிலும் தெரியாத நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்தனர்.