சத்தியமங்கலம்: அடுத்தடுத்து பைக்கில் வந்த 2 பேரை காட்டு யானை அடித்துக்கொன்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதி சாலை வழியாக வாகனங்களில் செல்வோரை காட்டு யானைகள் தாக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர், குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக பொருளாளர் பொம்மே கவுடர் (60), பைக்கில் குன்றியிலிருந்து மாக்கம்பாளையத்துக்கு வனப்பகுதியில் உள்ள மண் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் நின்ற காட்டு யானை அவரை துரத்தியது. இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார். எழுந்து ஓடுவதற்குள் அவரை யானை தும்பிக்கையால் சுழற்றி வீசி மிதித்தது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த விவசாயி சித்து மாரியும் (57), ஒரு வாலிபரும் இதை பார்த்து அதிர்ச்சியடைது, பைக்கை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். வாலிபர் தப்பிவிட சித்துமாரி யானையிடம் சிக்கினார். அவரையும் துதிக்கையால் சுழற்றி வீசி யானை மிதித்தது. தகவலறிந்து கடம்பூர் வனத்துறை மற்றும் போலீசார் வந்து பார்த்தனர். அதற்குள் பொம்மே கவுடரும், சித்து மாரியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.