மன்னார்குடி அருகே 17 வயதான சிறுமி வீட்டில் திருமணம் செய்து வைக்காத விரக்தியில், காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. பொறியியல் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள தலைஞாயிறு கிராமத்தை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் மகள் நிஷா என்ற 17 வயது சிறுமியும், பாரதிராஜாவும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் உறவினர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி நிஷாவிற்கு திருமண வயது வந்ததும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் சம்பவம் நடந்த நேற்று நிஷா வேதாரண்யத்தில் இருந்து பருத்திக்கோட்டையில் உள்ள காதலன் பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு பாரதிராஜாவின் பெற்றோர்கள் நிஷாவை உள்ளே அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த காதல் ஜோடி இருவரும், பருத்திக்கொட்டை சடைமங்கலம் அருகே ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த மக்கள், உடனடியாக வடுவூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வேறு ஏதும் பின்னணி இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.