விழுப்புரம்: தற்கொலை செய்ய ஒருநாள் விடுப்பு கேட்டு எஸ்பிக்கு, ஆயுதப்படை எஸ்ஐ மெசேஜ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருந்தவர் மகிபால். 6 மாதங்களுக்கு முன் அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். எந்த குற்றமும் செய்யாத நிலையில், தன்னை ஏன் ஆயுதப்படைக்கு மாற்றினார்கள் என்று நியாயம் கேட்க எஸ்பியை பல முறை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் எஸ்பி அலுவலக இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஓய்வு பெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் தொடர்ந்து ஆயுதப்படையில் வைத்திருந்ததால் மகிபால் மனம் உடைந்தார்.
தன்னால் இனி உயிர் வாழ முடியாது என்றும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதற்காக இன்று (நேற்று) ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தனது செல்போனில் இருந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் எஸ்பி அலுவலக இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வைத்து விட்டு, நேற்று பிற்பகலில் இருந்து மாயமானார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பல்வேறு இடங்களிலும் தீவிரமாக தேடி கண்டுபிடித்த போலீசார், சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.