புதுடெல்லி: நாட்டில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்ஷன் முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: புதிய பென்ஷன் திட்டம் 2004-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனிடையே டிசம்பர் 22, 2003-க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு செல்ல ஒரு வாய்ப்பை தர அரசு முடிவு செய்துள்ளது.
2003-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதிக்கு முன் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டாலும், புதிய ஓய்வூதிய முறை நடைமுறைக்கு வந்த ஜனவரி 1, 2004-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களும் இப்போது புதிய ஓய்வூதிய முறையில்தான் உள்ளனர். அவர்களுக்குத் தான் இந்த வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்துக்குத் திரும்ப அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களால் ஆட் சேர்ப்பு செயல்முறை தாமதமாகி 2004-ல் பணியில் சேர்ந்த மத்திய ஆயுதப்படை(சிஏபிஎஃப்) பணியாளர்கள் மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
வைப்புநிதிக்கு மாற்றம்: புதிய பென்ஷன் திட்டம் மூலம் தொகை வரவு வைக்கப்பட்ட பணியாளர்களின் பங்களிப்பு, அவர்கள் பழைய ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்தால் தனிநபரின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.