புதுடெல்லி: தெற்கு காஷ்மீரின் அம்ஷிபுராவில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த போலி என்கவுன்டர் வழக்கில் ராணுவ கேப்டன் பூபேந்திர சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஜோரி மாவட்டத்தை சேர்ந்த இம்தியாஸ் அகமது, அப்ரார் அகமது, முகமது இப்ரார் ஆகிய மூன்று பேரும் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம், ஷோபியான் மலைப்பகுதிக்கு சென்றிருந்தனர். அவர்களை தீவிரவாதிகள் எனக் கூறி ராணுவத்தினர் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். இந்த போலி என்கவுன்டர் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய சர்ச்சைகளை தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்க ராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணையில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புகளை மீறியதாகவும், ராணுவம் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை பின்பற்றவில்லை எனவும், அப்போதைய ராணுவ கேப்டன் பூபேந்திர சிங் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பூபேந்திர சிங்குக்கு ராணுவ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.