மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். முன்னதாக மதுரை விமானநிலையத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று கலைஞரின் பேனாவை நினைவுகூரும் விதமாக மிகப்பெரிய பேனாவை பரிசாக அளித்தனர். மனுக்கள் பெற்ற முதல்வர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமானநிலையம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை வழிநெடுகிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த மனுக்களில் இடப்பிரச்னை, சொத்து பிரச்னை தொடர்புடையவை இருந்தன என போலீசார் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த பொதுமக்களையும் முதல்வர் சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். 18 சங்க பிரதிநிதிகள்: 5 மாவட்டங்களில் உள்ள தொழில் வர்த்தக சங்கம், மீனவர் சங்கம், விவசாயிகள் சங்கம், முன்னோடி விவசாயிகள், இயற்கை விவசாயிகள், உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், மலேசியா கோரப்பட்டு உற்பத்தியாளர்கள், ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் சங்கம், கோகோ உற்பத்தியாளர் சங்கம், முல்லைப்பெரியாறு பாசன விவசாய சங்கம், பாரம்பரிய மீனவர் சங்கம் உள்ளிட்ட 18 சங்கங்களை சேர்ந்த 25 பிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார்.
‘முதல்வரே… வருக வருக’: முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகையை முன்னிட்டு, சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பதிவில், ‘‘அன்று எதிர்கட்சித் தலைவராக கீழடியை பார்வையிட வந்தார். இன்று முதலமைச்சராக கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்க வருகிறார். எதுவும் இல்லையெனச் சொல்லி வெளியேறியது தான் ஒன்றிய அரசியல். ஆனால், எதுவெல்லாம் இருக்கிறது பார்… என உலகிற்கே காட்சிப்படுத்துவதுதான், தமிழ்நாட்டு அரசியல். தமிழக முதல்வரே வருக வருக…’’ என பதிவிட்டுள்ளார்.