சென்னை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள பிஹார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் குழு அமைத்துள்ளன.
பிஹார் மாநில குழுவில் அம்மாநில கிராம வளர்ச்சித் துறை செயலர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு செயலர் அலோக்குமார், டிஐஜி கண்ணன் உள்ளிட்ட 4 பேரும், ஜார்க்கண்ட் மாநில குழுவில் டிஐஜி தமிழ்வாணன், தொழிலாளர் நல இணை ஆணையர் ராகேஷ் பிரசாத், தொழிலாளர் கண்காணிப்பாளர் அபிஷேக் வர்மா, மாநில புலம்பெயர் தொழிலாளர் நலன் பிரதிநிதிகள் ஆகாஷ் குமார், சிக்கா ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் சென்னையில் தமிழக தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் மற்றும் டிஜிபியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் மற்றும் அதிகாரிகள், வெளி மாநில குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.