அய்யா வைகுண்டர் அவதார நாளுக்கு முதல்வர் வாழ்த்து கூறியது ஏன்? சபாநாயகர் விளக்கம்!

திமுக தலைவர்கள் தீபாவளி பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்வதில்லை. அதேசமயம் அய்யா வைகுண்டர் அவதாரத் திருநாளுக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
வாழ்த்து செய்தி வெளியிட்டார். இதற்கான காரணத்தை சபாநாயகர் அப்பாவு விளக்கியுள்ளார்.

முதல்வர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி!

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியாபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசும்போது, தமிழகத்தில் திமுக சாமானிய மக்களை பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு ஒரு சிலர் தீபாவளிக்கு வாழ்த்துக்களை ஏன் திமுக கூறுவதில்லை என கேட்பார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்

வதம் செய்பவர்களுக்கு எதிரான இயக்கம்!

திமுக எப்போதும் வதம் செய்பவர்களுக்கு எதிராகவும், சாதி , சனாதன அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இயக்கமாகவும் இருப்பதால்தான் தீபாவளிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து சொல்வது கிடையாது. அதனால்தான் கலைஞரும் சொன்னது கிடையாது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் சொன்னது கிடையாது. ஆனால் அய்யா வைகுண்டர் கடவுள் அவதாரமாக அன்பை மையமாக வைத்து எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் சமம் என கூறினார்.

அய்யா வைகுண்டரின் சமூக நீதி!

சமூக நீதிக்கு யார் இறைவன் என்றால் அது அய்யா வைகுண்டர் தான். அவர்தான் கடவுள் எங்கே இருக்கிறார் என கேட்டதற்கு உன்னிலும் உள்ளார் என்னிலும் உள்ளார் எல்லோரிலும் கடவுள் உள்ளார் என்றார். அதனால் தான் அய்யா வைகுண்டர் பிறந்த நாளுக்கு மட்டும் தமிழக முதல்வர் வாழ்த்துக்களை கூறினார்.

திமுக இந்து பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து கூறுவது இல்லை என்ற கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்திருப்பது கவனம் பெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.