அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற உள்ளது. மார்ச் 10ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து நிரந்த பொதுச்செயலாளருக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
பொதுச் செயலாளர் தேர்தல்,
ஓபிஎஸ்
ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட திட்டம் ஆகியவை தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த வேகத்தில் உடனடியாக நிரந்தர பொதுச் செயலாளாராகும் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம்
எடப்பாடி பழனிசாமி
கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்னர் அதில் கவனம் செலுத்தலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறிய நிலையில் மார்ச் 10ஆம் தேதி அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடர்ந்த நிலையில் தீர்மானத்துக்கு தடை விதிக்க மறுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
உரிமையியல் வழக்கிலும் தீர்ப்பு தமக்கு சாதகமாகவே இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறாராம். அவரது வழக்கறிஞர்களும் அதையே கூறியுள்ள நிலையில் உற்சாகமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தி வருகிறாராம்.
ஓபிஎஸ் தரப்புக்கு அடிமேல் அடி விழுந்து வரும் நிலையில் அவரது ஆதரவாளர்களை குறிவைத்து திமுக தரப்பு காய் நகர்த்தி வருவதாக சொல்கிறார்கள். திமுகவுக்கு செல்வதை தடுத்து அதிமுக பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகளில் ஈடுபடுங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதனால் பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமானவர்கள் யார் யார் எடப்பாடி அணிக்கு தாவப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் அதை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளாராம். நாமாக தேடிப்போய் யாரையும் அழைக்க வேண்டாம். நம்மைத் தேடி வருபவர்க்ளை மட்டும் இப்போது இணைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்” என்கிறார்கள்.