சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கீழடி அருங்காட்சியகம் இன்று காலை 9 முதல் பார்வைக்காக அனுமதியளிக்கப்பட்டது.
அருங்காட்சியகத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 2,600 வருடங்களுக்கு முன்பு தமிழ்ச்சமுதாயம் இங்கு வாழ்ந்துள்ளது. கல்வியறிவு, நெசவு, விவசாயம் உள்ளிட்டவற்றில் மிகவும் சிறப்புவாய்ந்த தமிழ்ச்சமுதாயம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதில் பண்டையகால மக்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருட்கள், விலங்கினங்களின் எலும்புகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர். மறு அறிவிப்பு வரும்வரை அருங்காட்சியகத்தை காண இலவசமாக அனுமதிக்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
தினமும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை அருங்காட்சியகத்தை காண அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அருங்காட்சியக கட்டிடத்திலும் தொலைக்காட்சியின் மூலம் அகழாய்வு பற்றிய தகுப்பு ஒளிபரபரப்பப்படுகிறது.