‘கேரளாவிற்கு வாருங்கள்’ – முக ஸ்டாலினுக்கு பினராய் விஜயன் அழைப்பு.!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முக ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

தோள்சீலை போராட்டத்தின் 200 ஆண்டு நிறைவையொட்டி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக கேரள முதல்வர்கள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, ”கேரளாவில் மார்பு மறைக்கும் போராட்டமும் இப்போராட்டமும் ஒன்று தான். இருநூற்றாண்டுக்கு முன்னர் அன்றைய மன்னர் சனாதன ஆட்சி நடைபெறும் என்றார். அப்போது பல கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றிற்கெதிரான போராட்டங்கள் பல நடந்தன. அத்தகைய போராட்டத்திற்கு பின்பு மார்பு மறைக்க சட்டம் இயற்றும் நிலை ஏற்பட்டது.

சீர்திருத்தத்திற்காக போராடிய திருவள்ளுவர், பாரதி, பெரியார், வைகுண்டர், நாராயணகுரு போன்றோர் நினைவுக்குரியவர்கள். அவர்களது வழியில் இன்றும் இடதுசாரிகள் போராடி வருகிறார்கள். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் சனாதன கொள்கையை போல், இன்றும் அதை மீண்டும் கொண்டுவர சிலரால் பேசப்படுகிறது. அதன் மூலம் பிராமண ஆதிக்கத்தை கொண்டு வர சங்க் பரிவார் கும்பல் விரும்புகிறது.

பசுவுக்கும் பிராமணனுக்கும் நலம் பெறட்டும் எனவும் அவர்களுக்கு நலம் பெற்றால் அனைவரும் நலம் பெறலாம் என சங் பரிவார் கும்பல் கூறுகிறது. தோள்சீலை போராட்டம் என்பது சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டமாக மட்டுமல்ல, அது ஒரு அரசியல் போராட்டமாகும். தற்போது ஆட்சியாளர்களின் ஆதரவோடு மத சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

மத பிரச்சினை இல்லாத மாநிலங்கள் குறைவு, அவற்றில் தமிழகமும் கேரளாவும் முக்கியமானதாகும். தங்களை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது என நினைக்கும் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில், நாடு முழுவதும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பீகாரில் நிதிஷ்குமார், ஹரியானா மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம், மராட்டியத்தில் சிவசேனாவில் ஒரு பிரிவினர் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் பஞ்சாயத்து தலைவருக்கு இடைஞ்சல் ஆட்சியரிடம் புகார்

இடைத்தேர்தல்களில் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக முடிவு வந்துள்ளது. டெல்லி மாநகராட்சியில் இழப்பு, மராட்டிய இடைத்தேர்தலில் தோல்வி போன்றவை பாஜகவுக்கு எதிரான அறிகுறிகள் தென்படுகிறது. காசி, மதுரா போன்றவற்றை ஆக்கிரமிக்க முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. திரிபுராவில் கடந்த தேர்தலில் 50 சதவீதம் வாக்கு பெற்ற நிலையில், இந்த ஆண்டு 10 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மீதான நம்பிக்கை இழந்து வருகிறது. மொழி பாதுகாப்பு, கூட்டாட்சி தத்துவம், மாநிலங்களின் உரிமைகள் மீட்பு போன்றவற்றிற்காக போராட வேண்டிய தேவை உள்ளது. அதற்காக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் அன அழைப்பு விடுக்கிறேன்’’ என அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.