வெளிமாநில தொழிலாளர் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்தி..!!
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போலி வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பீகார் மாநில அதிகாரிகள் குழு தமிழகம் வருகை புரிந்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை செயலர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்று திருப்பூருக்கு வந்திருந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய், திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து திருப்பூரில் உள்ள பிகார் மாநில தொழிலாளர்களர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலமுருகன் பேசியதாவது “வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றது.
சமூக வலைதளங்களில் பரப்பவும் வீடியோக்களில் துளியும் உண்மை இல்லை. வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் இயல்பு நிலை திரும்பியுள்ளது” செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.