ஐதராபாத்: பயனாளிகள் வங்கி கணக்கிற்கு நேரடியாக மானியம் செலுத்தும் முறையால் இதுவரை ரூ.2.2 லட்சம் கோடி நிதி சேமிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார விவகார துறை செயலாளர் கூறி உள்ளார். நிதி சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெறுவதற்கான உலகளாவிய கூட்டமைப்பின் 2ம் ஆண்டு கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில், ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் பங்கேற்று பேசுகையில், ‘‘இந்தியாவால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு புதுமையானது, அனைவரையும் உள்ளடக்கியது.
இது மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான நிதி தொடர்புகளிலும், வணிகத்திற்கும் மக்களுக்கும் இடையேயான நிதி தொடர்புகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், முக்கிய அரசு திட்டங்களில் பயனாளிகளுக்கான மானியம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதன் மூலம் இதுவரை நாட்டிற்கு ரூ.2.2 லட்சம் கோடி மிச்சமாகி உள்ளது. அதோடு, விரைவாக பலன்கள் மக்களை சென்றடைவதோடு, ஊழலும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது’’ என்றார்.