கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரில், நெடுஞ்சாலை ஓரம் பைக்கை நிறுத்திய இரு பெண்களை, தகாத வார்த்தைகளால் திட்டி, சாவியைப் பறித்த நபர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். நேற்று சேரான், பிரியங்கா ஆகிய இரு பெண்கள், பைக் ட்ரிப் முடித்துவிட்டு, வீட்டுக்குச் செல்வதற்காகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, தாகம் தீர்க்க ரோட்டோரம் பைக்கை நிறுத்தியிருக்கின்றனர்.
அப்போது, ரோட்டின் மறுபக்கத்தில் அங்கிருக்கும் வீட்டிலிருந்து வெளியே வந்த முதியவர் ஒருவர், ‘இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது, வேறு பக்கம் செல்லுங்கள்’ எனக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அதையடுத்து அந்த வீட்டிலிருந்து வந்த மஞ்சுநாத் என்பவர், ‘நான் அட்வகேட், இங்கே நீங்க நிக்கக் கூடாது, இது என்னோட பிராப்பர்டி கேட் இருக்குற பகுதி’ எனக் கூறி, அந்தப் பெண்களைத் தகாத வார்ததைகளால் திட்டி, மிரட்டியிருக்கிறார்.
‘ரோட்டுல பைக்கை நிறுத்துனா தப்பா… ரோடு எல்லாருக்கும் பொதுவானது. நாங்க உங்க கேட்டுக்கு முன்னாடி பைக்கை நிறுத்தலை’ என, மஞ்சுநாத்திடம் இரு பெண்களும் கூறியிருக்கின்றனர். அப்போது அவர், இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களின் பைக்குகளை வீடியோ எடுத்த மஞ்சுநாத், அவர்களின் பைக் சாவியை பறித்துச் சென்றிருக்கிறார்.
இது குறித்து பிரியங்கா, சேரான் இருவரும் அந்தப் பகுதியிலுள்ள, கோனனகுண்டே போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். ஆனால், வழக்கு பதிவுசெய்ய போலீஸார், ஏழு மணி நேரத்துக்கும் மேலாக தாமதித்ததுடன், ‘சமாதானமாகச் செல்லுங்கள்’ எனக் கூறியிருக்கின்றனர்.
பின்னர், ஏழு மணி நேரத்துக்குப் பிறகு, போலீஸார் மஞ்சுநாத்மீது, பெண்களைத் தாக்கியது, தகாத வார்த்தைகள் பேசியது உட்பட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். மஞ்சுநாத் சாவியைப் பறிக்கும் வீடியோவை, பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.