சென்னை, வடபழனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நானும் சென்னையைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய நிஷாந்த்தும் நானும் சந்தோஷமாக இருந்தோம். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறிய அவர், என்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பல லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றிவிட்டார்.

இந்த நிலையில் நிஷாந்த் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தகவல் எனக்குக் கிடைத்தது. அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்துவதோடு என்னை ஏமாற்றிய நிஷாந்த் என்பவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் இந்த வழக்கை மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். மதுரவாயல் அனைத்து மகளிர் போலீஸார் நிஷாந்த்திடம் விசாரணை நடத்த முடிவுசெய்திருந்தனர்.
இந்தச் சூழலில் நிஷாந்த், தன்னுடைய நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நிஷாந்த்தின் குடும்பத்தினர், அவரின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தீயணைப்புத்துறையினர் உதவியோடு போரூர் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இன்று மாலை வரை நிஷாந்த்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் அவரின் கார் அந்தப் பகுதியில் நிற்பதை போலீஸார் கண்டறிந்தனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

இது குறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் போலீஸாரிடம் கேட்டதற்கு, “பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் நிஷாந்த் என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் நிஷாந்த்மீது அளிக்கப்பட்ட புகாரால், அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது. புகாரின்பேரில் நிஷாந்த்தைத் தேடி வந்த சூழலில் அவர், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். அவரின் காரை போரூர் ஏரி பகுதியிலிருந்து மீட்டிருக்கிறோம். நிஷாந்த் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. இதுவரை நடந்த மீட்புப்பணியில் எந்தச் சடலும் கிடைக்கவில்லை. நிஷாந்த் குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை” என்றனர்.