லாலு, மனைவி பிள்ளைகளிடம் விசாரணை!| Investigation of Lalu, wife and children!

பாட்னா:ரயில்வேயில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது, பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன.

கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீஹாரைச் சேர்ந்த சிலருக்கு, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதற்கு பிரதிபலனாக, வேலை பெற்றவர்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலைக்கு இந்த நிலங்கள், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தார் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதைத் தவிர, ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரிலும் நிலங்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தை, லாலு பிரசாத் யாதவ் குடும்பம் கையகப்படுத்தியது.

இந்த வகையில், 1 லட்சம் சதுர அடி நிலம், ௪.௩௯ கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தை விலை இதைவிட பல மடங்கு அதிகமாகும்.

இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் ஏற்கனவே பல கட்ட விசாரணை நடத்தியுள்ளது; குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில், லாலுவின் மனைவியும், பீஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி மற்றும் பிள்ளைகளிடம், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவரது வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

‘எவ்வித சோதனையோ நடத்தப்படவில்லை. வழக்கு தொடர்பாக ரப்ரி தேவியிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது’ என, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளது.வழக்கு தொடர்பாக விசாரிக்க லாலு பிரசாத் யாதவுக்கும், ‘நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்த பதில் அவரிடமிருந்து வரவில்லை என்றும் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, புதுடில்லியில் உள்ள நீதிமன்றத்தில், வரும் ௧௫ம் தேதி ஆஜராக, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ., விமர்சனம்

பீஹார் மாநில பா.ஜ., மூத்த தலைவர்கள் நிதின் நபின், ஜிபேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் கூறியுள்ளதாவது:தான் விதைத்த பாவங்களுக்கான பலனை, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் தற்போது அறுவடை செய்கின்றனர். சி.பி.ஐ., உடனான லாலுவின் தொடர்பு மிக நீண்ட காலமானது. கால்நடை தீவன ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது மத்தியில் பா.ஜ., ஆட்சி இல்லை.சி.பி.ஐ., தன் அதிகாரத்துக்கு உட்பட்டு, சுயேச்சையாக செயல்படுகிறது. ஆனால், தற்போது பா.ஜ.,வை குறை கூறுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.