பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலக அண்ணாமலை தான் காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அன்பு சகோதரர் நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் கட்சியிலிருந்து விலகினார்.
இவ்வாறு பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் நிலவி வரும் சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வரும் மார்ச் 10ம் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழகத்திற்கு வரும் அவர் கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், தமிழகத்திற்கு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.