துபாய், ”ஈரானில், பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு விஷம் வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்,” என, ஈரானின் தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரானில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவியர் பலர் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மாணவியரின் உடலில் விஷம் இருந்தது தெரிந்தது.
ஈரானில் உள்ள 30 மாகாணங்களில், 21 மாகாணங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியருக்கு விஷம் வைக்கப்பட்டுஉள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் சமீபத்தில் உறுதி செய்தனர்.
மாணவியர் பள்ளிக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த சதிச் செயல் நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது.
கடந்த நவ., மாதம் முதல், 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஈரானின் தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி முதல்முறையாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”பள்ளி மாணவியருக்கு விஷம் வைக்கப்பட்டது உண்மை என தெரியவந்தால், மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement